ஆஸி. திணறல்: புவனேஷ்குமார் புதிய மைல்கல்

  • Latest News,Images,Videos & Music going Viral now - Viralcast.io

சிட்னி,

சிட்னியில் நடந்து வரும் முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்தரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் சர்வதேச ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. சிட்னியில் நடந்து வரும் முதலாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ராகுல் சண்பென்ட் செய்யப்பட்டு, நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சிட்னி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கும், பேட்டிங்குக்கும் ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தோனி விக்கெட்கீப்பராகவும், தினேஷ் கார்த்திக் கூடுதல் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சில் கலீல் அகமது, புவனேஷ் குமார், முகமதுஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் இடதுகை வேகப்பந்துவீ்ச்சாளர் ஜேஸன் பெஹரன்டார்ப் அறிமுகமாகியுள்ளார், 8 ஆண்டுகளுக்குப் பின் ஆஸி. ஒருநாள் அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் இணைந்துள்ளார்.

ஆரோன் பிஞ்ச், கேரே ஆட்டத்தைத் தொடங்கினார். கலீல் அகமது, புவனேஷ்குமார் வீசிய முதல் இரு ஓவர்களில் ஆஸி. பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள்.

புவனேஷ்குமார் வீசிய 3-வது ஓவரில் ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் சேர்த்த நிலையில், கிளீன் போல்டாகி வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் சர்வதேச ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தினார். 96 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்திய 12-வது இந்திய வீரர் எனும் பெருமையையும் புவனேஷ்குமார் பெற்றார்.

அடுத்து கவாஜா களமிறங்கி, கேரேயுடன் சேர்ந்தார். கேரேயும், கவாஜாவும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களைச் சேர்த்தனர். கலீல் அகமதுவின் 4-வது ஓவரில் கேரே 2 பவுண்டரிகள் விளாசினார். இருவரின் பந்துவீச்சிலும் ரன்கள் செல்லத்தொடங்கியதால், பந்துவீச்சில் மாற்றம் செய்யப்பட்டது.

10-வது ஓவரை குல்தீப் வீசினார். 5-வது பந்தை கேரே சந்தித்தபோது பந்து பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்சாக அமைந்தது. கேரே 24 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப் தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார்.

அடுத்து வந்த ஷான் மார்ஷ், கவாஜாவுடன் இணைந்து விளையாடி வருகிறார். 18 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்துள்ளது.